Pongu Tamizh Pongu Tamizh  

அத்துமீறிய முஸ்லிம் குடியேற்றத்தை எதிர்த்து ஆரையம்பதியில் சாகும்வரை உண்ணாவிரதம்!

அத்துமீறிய முஸ்லிம் குடியேற்றத்தை எதிர்த்து ஆரையம்பதியில் சாகும்வரை உண்ணாவிரதம்!

 

காத்தான்குடி நகரசபை தமது பிரதேச, செயலக எல்லையை நிர்ணயம் செய்து தமது பகுதிக்குரிய நிலங்களை ஒப்படைக்க வேண்டுமெனக்கோரி மட்டக்களப்பு ஆரையம்பதி மக்கள் இன்று காலைமுதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இவ் உண்ணாவிரதப் போராட்டமானது ஆரையம்பதி பிரதேச சபைத் தலைவர் திருமதி மேரி கிருஷ்ணகாந்தன் தலைமையில் இன்று ஆரம்பமாகியுள்ளது. ஆரையம்பதி பிரதேச சபையின் 7 அங்கத்தவர்கள் மற்றும் பல பொதுமக்களும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

காத்தான்குடி நகரசபை தங்களது எல்லைக்குரிய நிலங்களை ஆக்கிமிப்புச்செய்து வருவதைக் கண்டித்தே இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக உண்ணாவிரதமிருப்போர் தெரிவிக்கின்றனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ள மக்கள் பின்வரும் 7 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தே போராடி வருவதாக வெளியாகியுள்ளது.

1. மண்முனை பிரதேச வடக்கு எல்லையிலும் காத்தான்குடி நகரசபையின் அத்துமீறிய செயற்பாடு நிறுத்த வேண்டும்.

2. ஏற்கனவே வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின்படி காத்தான்குடி முஸ்லிம்களோ வேறு முஸ்லிம்களோ அத்துமீறி குடியேற்றப்படக் கூடாது. ஏற்கனவேயுள்ள முஸ்லிம்கள் வெளியேற்றப்பட வேண்டும்.

3. கோவில்குளம் பகுதியில் செயற்பட்டு வரும் நீர் விநியோகத் திட்டத்தினால் அங்குள்ள ஜீவனோபாய பயிர்த் திட்டம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. இது உடன் நிறுத்தப்பட வேண்டும்.

4. காங்கேயனோடை வீட்டுத் திட்டம் காங்கேயனோடை மக்களுக்கு அவரவர் வளவிலேயே கட்டிக் கொடுக்க வேண்டும்.

5. திண்மக் கழிவு சேகரிப்புத் திட்டம் காத்தான்குடி நகரசபையின் ஆரையம்பதி பிரதேசத்தில் செயற்பட்டு வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்.

6. மாவிலங்குதுறையில் பரம்பரையாக வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் அப்புறப்படுத்தப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

7. தமிழர்களின் பூர்வீக பிரதேசமான கடற்கரை பிரதேசத்தினுள் போலியான ஆவணங்களுடன் குடியேறியிருப்பவர்களை வெளியேற்ற வேண்டும். மீளக்குடியேற அனுமதிக்கக் கூடாது.

இந்நிலையில், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் குறித்த இடத்திற்கு வந்து தமது பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் எனவும் இல்லாவிடின் இக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீக்குளிக்கவும் தாம் தயாராக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், பொன். செல்வராசா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

 

புகைப்படம்: நன்றி வீரகேசரி


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

 
புதினங்கள்
செய்திகள்